எட்டு வழிச்சாலைக்காக நிலம் அளவிட வந்த அதிகாரிகளிடம், பொதுமக்கள் அழுது புரண்டு கதறினர். இதனை அடுத்து நிலத்தை அளவிட முடியாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

சென்னை - சேலம் இடையே அமைக்க திட்டமிடபடும் புதிய 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, நில அளவீடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நில அளவீட்டுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் நட்ட நடுகற்களை பிடுங்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களின் எதிர்ப்பால்,
நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

கலசம்பாக்கம் அருகே சாலையனூரில் நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளின் கால்களில் பொதுமக்கள் விழுந்து கதறி அழுது உருண்டு புரண்டனர். வீடு, நிலம், கிணறு என அனைத்தும் பறிபோவதாக சாலையனூர் மக்கள் வேதனை தெரிவித்தனர். மக்கள் கதறியதைக் கண்ட அதிகாரிகள், சாலையனூர் கிராமத்தைவிட்டு வெளியேறினர்.

செய்யாறு, எருமைவெட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிரே போனாலும் நிலத்தை தரமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாளகாபாடியில் நிலம் அளவிட வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது பொதுமக்களை களைந்து செல்லும்படி கூறிய போலீசாருடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.