கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட அதே கூட்டணி தொடர்கிறது எனவும், அந்தக் கூட்டணியில் இருந்து யாரும் விலகவில்லை எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது, அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்த  வியூகங்களும், அதற்கான காய்நகர்த்தல்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடருமா இல்லையா என கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், நாங்கள் இப்போதுவரையிலும்  இருந்து கொண்டு தானே இருக்கிறோம், கூட்டசியில் இருந்து எந்த கட்சியும் விலகிப் போகவில்லையே என்றார். அதிமுக பிஜேபி கூட்டணி உறுதியாகி விட்டதா?  என மற்றொரு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள்தான் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறோம், அதாவது கழகத்தின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கட்சிகள் தொடர்ந்து எங்கள் கூட்டணியில் தான் இடம்பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.