கருப்பர்கூட்டம் யூ-ட்யூப் சேனலை தடை செய்யும்படி யூ-ட்யூப் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இன்று  வன்னியர் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு விழா. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு வித்திடப்பட்ட நாள். சமுதாயத்தில் மிக மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்டுக் கிடந்த ஊமை சனங்களுக்கு உரிமை பெற்றுத் தருவதற்காக அடித்தளம் அமைக்கப்பட்ட நாள்.

எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தியாகங்கள், எத்தனையோ வலிகள், எத்தனையோ வேதனைகள். அத்தனையையும் அரைகுறையாய் போக்கியது 20% இட ஒதுக்கீடு தான். அதில் நமக்கு முழு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் நம்மால் 107 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த நன்னாளில் உயிர்த்தியாகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் தியாகம் செய்த நமது சொந்தங்களை போற்றுவோம். வன்னியர் சங்க ஆண்டுவிழாவையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்திய #கருப்பர்கூட்டம் யூ-ட்யூப் சேனலை தடை செய்யும்படி யூ-ட்யூப் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி. பா.ம.க சார்பிலும் ஆயிரக்கணக்கான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன'' என அவர் தெரிவித்துள்ளார்.