செந்தில்பாலாஜியை தொடர்ந்து விரைவில் தங்க தமிழ்செல்வனும் தி.மு.க.வில் சேரப்போகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23-ம் தேதி எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படும் என மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார்.

 

இதனிடையே நேற்று தேனியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். ஆனால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தினகரனுக்கு அருகில் இருந்து கொண்டு, அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார். டிடிவி தினகரனின் வளர்ச்சிகோ அல்லது ஆதரவாகவோ தங்க தமிழ்ச்செல்வன் பேசவில்லை. மேலும் செந்தில்பாலாஜியை தொடர்ந்து விரைவில் தங்க தமிழ்செல்வனும் தி.மு.க.வில் சேரப் போவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாகக் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.