அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பனிப்போரை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி என்கிற யோசனையால் கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.கவை பாடாக படுத்தி வந்தது பா.ஜ.க. ஆனால் தி.மு.கவோ ஆட்சியை கலைத்தால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று பா.ஜ.க விவகாரத்தில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான் திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது தான் தி.மு.கவின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டால் போதும் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு ஒரு இமேஜ் கிடைத்துவிடும் என்று வெங்கய்யாவிடம் எடப்பாடி எடுத்துக் கூறியதாகவும், அதனை வெங்கய்யாவும் ஏற்றுக் கொண்டதாகவுமே சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் டெல்லி விரைந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர்.



ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக அ.தி.மு.கவை ஆட்டுவித்து வருபவர் அருண் ஜேட்லி தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதானல் தான் எடப்பாடி பழனிசாமியின் இருகரங்களாக இருக்கும் தங்கமணியும் – வேலுமணியும் ஜேட்லியை சந்தித்தது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.கவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் தான் கூறி வருகின்றன.

ஆனால் தமிழக அரசியலை பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டும் என்றாலும் மாறும். தி.மு.கவின் இமேஜையும், கூட்டணியையும் காலி செய்துவிட்டால் போது அ.தி.மு.க தொண்டர்களின் பலத்தோடு நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்று சில புள்ளி விவரங்களை ஜேட்லியிடம் வேலுமணியும், தங்கமணியும் எடுத்துக்கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை கேட்ட ஜேட்லிக்கும் தி.மு.கவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதற்கு பதில் வழிய வரும் அ.தி.மு.கவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனை நல்லதாக தெரிந்துள்ளது.