தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்துள்ளதால் ஆத்திரமடைந்த அமமுகவினர் போஸ்டர் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 

ஆடியோ மூலம் டி.டி.வி.தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் மோதல் வலுத்துவிட்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முட்டுக்கட்டை போட்டு விட்டதால் வேறு வழியே இல்லாமல் தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணையவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.   

அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ள நிலையில், பதிலடியாகத் தங்கள் பங்கிற்கு அவரைப் போஸ்டர்களில் திட்ட ஆரம்பித்து இருக்கின்றனர்.

தினகரன் ஒரு விரல் நீட்டி எச்சரிப்பது போல் இருக்கும் அந்தப் போஸ்டரில், தங்க தமிழ்ச்செல்வன் தலையில் மதுபாட்டில்கள் இரண்டைக் கவிழ்த்து, ‘மதுவால் மதிமயங்கி தங்கம் தகரம் ஆனதே.. உன்னை வன்மையாகக் கண்டிக்கிறோம்..’ என்ற வாசகங்களை இடம்பெறச் செய்திருக்கின்றனர். மதுரை உட்பட, பல ஊர்களிலும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.