எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமமுகவின் கொள்கை பரபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் மற்றும் மே 19-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

மேலும் ஆளும் கட்சியான அதிமுக தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. எனினும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. திமுக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் வலுவான எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றது. இந்த தேர்தலில் பெரியளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக மண்னை கவ்வியது.

 

இந்நிலையில் தேனியில் இன்று அமமுக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எடப்பாடியை பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும். தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட வரவேற்றிருப்பேன் என்றார்.

 

மகனை வெற்றி பெற வைத்த துணை முதல்வர் ஓபிஎஸ், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளை கைவிட்டது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அமமுக தோல்விக்கு காரணம் பரிசுப் பெட்டி சின்னம் தான். கடைசி நேரத்தில் சின்னம் வழங்கப்பட்டதால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.