அமமுக கொள்கை பரபரப்பு செயலாளரான தங்க தமிழ்செல்வன் விரைவில் தாய்க்கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

முன்னாள் அமைச்சரான தங்க தமிழ்செல்வன் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் டி.டி.வி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். தாங்களே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியை விட்டே வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுகவுடன் இணைய வேண்டுமானால் எடப்பாடி, ஓபிஎஸை நீக்கி விட்டு ஒன்று சேரலாம் என்றெல்லாம் டி.டி.வி.தினகரனை விட கடுமையாக வசைபாடி வந்தார்.

 

இருந்தபோதும் அவ்வப்போது டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாட்டையும் மீறி அமமுகவில் இருந்து வந்தார். அதையும் மீறி திமுகவில் இணையப்போவதாக வதந்திகள் பரவியபோது அதனை மறுத்து வந்தார். அடுத்து தேனி தொகுதியில் மக்களவை தேர்தலில் நிற்கச்சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறார் டி.டி.வி. போட்டியிட விரும்பாத தங்க தமிழ்செல்வன், ‘’தேனியில் விவேக் ஜெயராமனை நிற்க வையுங்கள்’’ எனக்கூறியும் டி.டி.வி.தினகரன் கேட்கவில்லை. மறுப்பு சொல்ல முடியாமல் தேனியில் போட்டியிட்டார். 

மக்களவை தேர்தலில் அமமுக மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் ஜாகை மாறி வருகின்றனர். அப்போதே சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் தங்க தமிழ்செல்வன். அடுத்து அதிமுகவை பற்றி விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. 

தான் அதிமுகவுக்கு வருவதாக இருந்தால் ராஜ்யசபா எம்.பி சீட் அல்லது தேனி மாவட்ட செயலாளர் பதவி இரண்டில் ஒன்றை கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அதிமுக சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் பாராட்டத் தொடங்கி விட்டார் தங்க தமிழ்செல்வன். இதனையடுத்தே ’’டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை. தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது. அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப பிடிக்கும்’’ என எடப்பாடியின் திட்டங்களை பாராட்டி இருக்கிறார். 

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட டி.டி.வி.தினகரன் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.