அமமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 12 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழக அரசையும், அரசின் நடவடிக்கைகள் கண்டித்து டிடிவி.தினகரன் பேசினார். 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை உண்ணாவிரத போராட்டத்துககு அழைத்து வந்தது. 

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது இடங்களில் பட்டாசு வெடித்து மாசு ஏற்படுத்தியது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், நிர்வாகி தங்கதுரை உள்பட 12 பேர் மீது நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.