தன்னை கொள்கை பரப்புச் செயலாளராக திமுக தலைவர் ஏன் நியமித்தார் என்பது குறித்து தங்க  தமிழ்ச்செல்வன் விளக்கள் அளித்துள்ளார்.
இரு மாதங்களுக்கு முன்பு அமமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார் தங்க தமிழ்ச்செல்வன். தற்போது அவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சிவா, ஆ. ராசா ஆகியோருடன் சேர்ந்து மூன்றாவது கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தங்கத் தமிழ்ச் செல்வன் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதை திமுகவில் முணுமுணுப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவெளியிலும் இந்தப் பதவி அளிப்பு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. 
இந்நிலையில் தன்னை கொள்கை பரப்பு செயலாளராக மு.க. ஸ்டாலின் நியமித்திருப்பது ஏன் என்பது பற்றி தங்க தமிழ்ச்செல்வன் ஆங்கில் நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார். “புதிதாக கட்சியில் சேர்ந்த ஒருவருக்கு கட்சி மதிப்பளிப்பது இயற்கையானதுதான். நான் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். அதிமுகவில் 12 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். எனது எம்.எல்.ஏ. பதவி பறிபோன பிறகு இந்த அரசை அகற்ற பாடுபட்டேன். இதுபோன்ற விஷயங்களை எல்லாம் தலைவர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டிருப்பார். 
எனக்குப் பதவி கிடைத்ததால், திமுகவில் உள்ள தலைவர்கள் என்னை எதிர்மறையாக அணுகுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதிலுமிருந்து திமுக தொண்டர்கள் வாழ்த்து செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் என்னுடைய பணி எப்படி இருந்ததோ அதுபோலவே இப்போது தொடரும். தேனி மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்துவேன். இந்தப் பதவி எனக்குக் கிடைத்த மரியாதை. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போதும் கட்சியில் நான் சாதாரண தொண்டராகவே இருக்கிறேன் ஆனால், கட்சித் தலைவர் எனக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலையில் டிடிவி தினகரன் குறித்து கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு, “டிடிவி தினகரன் கட்சியை வளர்க்க எதுவும் செய்யவில்லை. சட்டப்பேரவையில் நாங்கள் ஒரு சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்களாக இருந்தோம். 9 எம்.எல்.ஏ.க்கள் புது முகங்களாக இருந்தார்கள். தினகரனின் தவறான முடிவால் 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்தோம். தொடக்கத்தில் அதிமுகவை கைப்பற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால், புதிய கட்சியைத் தொடங்கிய பிறகு அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.” என்று தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.