தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும் போட்டியிட்டனர்,

தேர்தல் பிரச்சாரத்தின் போது ரவிந்திரநாத் பணத்தை அள்ளி இறைத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலானது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இந்நிலையில் தேனி மக்களவைத்  தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி தும்மக்குண்டு பகுதி ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஒருமணி நேரம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்த விபரம் அறிய அ.ம.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் , ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவை சந்திக்க ஏஜன்ட்களுடன் வந்தார். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பதட்டம் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தங்க தமிழ்ச்செல்வன் , இந்திய அளவில் பாஜகவும்,  தமிழகத்தில் திமுக கூட்டணியும் வெற்றி பெறுகின்றன. ஆனால் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

ஆண்டிபட்டி தொகுதியில் ஒவ்வொரு 'பூத் கமிட்டி'யிலும் 12 பேர் இருந்தனர். ஆனால் இயந்திரத்தில் எங்களுக்கு ஓட்டு 'பூஜ்யம்' என காட்டுகிறது. ஓட்டுக்கு அதிமுகவினர் கொடுத்த ஆயிரம், இரண்டாயிரத்தை வாங்கி மாற்றி ஓட்டை போட்டுவிட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் மகன் இந்தத் தேர்தலில் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. இது போன்று செலவு செய்பவர்களால் மட்டுமே தற்போது வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

எங்களைப்போன்ற மக்கள் சேவை செய்வோருக்கு மரியாதை இல்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறதா எனத்தெரியவில்லை. அதன் மீது நம்பிக்கை இல்லை. ஒருமாதமாக ஏதோ சதி நடந்துள்ளது என தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.