’பக்கம் பக்கமா வழிஞ்சு பேசுனவெல்லாம் பகுமானமா வாழ்றான். ஆனா ஒரேயொரு டயலாக்கை பேசிட்டு நான் படுற பாடு இருக்குதே! அய்ய்யய்யய்ய்யோ’ என்று கண்ணீர் விடாத குறையாக புலம்பிக் கொட்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
காரணம்....’அழகான வேட்பாளர்’ என்று தி.மு.க.வின் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை பிரசாரத்தில் உதயநிதி புகழ்ந்து வைக்க, தமிழ்நாடே அதை பிடித்துக் கொண்டு அவரை வெச்சு கலாய்த்து தள்ளுகிறது. பிரசாரத்துக்கு போற இடம் வர்ற இடமெல்லாம் இதைச் சொல்லியே உதயநிதியை உசுப்பேத்தி உசுப்பேத்தி புண்ணாக்குறாங்களாம் எதிர்கட்சிகள். ஆனால் கூட்டணி கட்சி தோழர்களின் நய்யாண்டியோ வேறு ரகமாய் இருப்பதுதான் சுவாரஸ்யம். 
அது என்ன ரகம்?....

சமீபத்தில் கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்டின் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பிரசாரம் செய்ய அங்கே சென்றிருக்கிறார் உதயநிதி. வெறுமனே மைக்கை பிடித்தோம், கடிச்சு துப்புமளவுக்கு பேசி வைத்தோம் என்றில்லாமல், ரோட்டில் போகும் வரும் இளைஞர்களிடம் வாகனத்தில் நின்றபடியே ஜாலியாக பேச்சுக் கொடுத்து கலகலத்திருக்கிறார். 

அதோடு நில்லாமல், பிரசார வாகனத்தை சுற்றி நிற்கும் கூட்டணி தோழர்களிடமும் கூலாக கதைத்துக் கொண்டிருந்திருக்கிறார் உதய். அப்போது ‘தோழர் அந்த மைக்கை கொஞ்சம் கொடுங்க.’ என்று உரிமையாக வாங்கிய கம்யூனிஸ்ட் கமிட்டி மெம்பர் ஒருவர், ‘உதயநிதி தோழர், எங்க வேட்பாளர் நடராஜன் எப்படி? என்று கேட்க, இவரும் ‘ஓ, நல்லவர், திறமையானவர், மக்கள் சேவை எண்ணமுள்ளவர்’ என்று  சொல்ல, அவரோ ‘அப்ப எங்க வேட்பாளர் அழகானவரில்லையா? தமிழச்சி மட்டும்தான் அழகிய வேட்பாளரா?’ என்று சிரித்தபடியே கேட்க, ஏரியாவே குலுங்கிவிட்டது கலகலப்பில். 

இதை எதிர்பாராது ஓவராய் வெட்கப்பட துவங்கிய ஸ்டாலின் மகன் பின் தன்னை  அலர்ட் செய்தபடி ‘ஒரேயொரு வார்த்தை சொன்னதுக்கு இப்படியா பாஸ் மாநிலம் முழுக்க விரட்டி விரட்டி வெச்சு செய்வீங்க?’ என்று மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு சிரிப்பாய் நியாயம் கேட்டிருக்கிறார். 
ஒருவார்த்தை சொன்னாலும் திருவார்த்தையல்லவா உதய்!