தினகரனை தான் ஏன் ஆதரிக்கவில்லை என்பது பற்றி மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமீமுன் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார்.

 
 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தொடக்கம் முதலே மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம்முன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்துவந்தார். ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து அந்தக் கூட்டணியை விமர்சிக்கத் தொடங்கினார் தமீமுன் அன்சாரி. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கப் போவதாகவும் தமீமுன் அன்சாரி அறிவித்தார். இந்நிலையில் தினகரனை ஆதரிக்காமல் காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஆதரிப்பது ஏன் என்பது பற்றி தமீமுன் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமீமுன் அன்சாரி கூறும்போது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பாஜகவை தோற்கடிக்கக்கூடிய சக்தி காங்கிரஸ் கூட்டணிக்குதான் உள்ளது. எனவேதான் தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தோம். பாஜக ஒரு நல்ல பாம்பு. அந்தப் பாம்பை அடிக்க குச்சியை எடுக்கிறோமா அல்லது தடியை எடுக்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். கள நிலவரப்படி காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் பாஜகவை வீழ்த்த முடியும்.
மற்றபடி தினகரன் மீது மதிப்பு, மரியாதை உண்டு. அவரை குறைத்தும் மதிப்பிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பற்றி கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்தார்.