கடந்த ஆண்டுவரை துணிச்சலாக எந்த கருத்தையும் சொல்ல முடியாத கமலஹாசன்  ஜெயலலிதா மறைந்த பிறகு எப்படி தைரியமாக பேசுகிறார் ?  என பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என பல தரப்பிலிருந்து கண்டனக் குரல் எழுந்தது.

இதற்கு விளக்ககம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து போய் விட்டதாக தெரிவித்தார். அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடி கட்டிப் பறப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக அமைச்சர்கள் கமலஹாசனை வறுத்தெடுத்து வருகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும், வன் கொடுமை சட்டத்தித்கீழ் கைது செய்ய வேண்டும் என பல வழிகளில் கமலஹாசனை தாக்கி பேசி  வருகின்றனர்.

இதனிடையே  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்க நடிகர் கமலுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தார்.

இதனால் கடுப்பான பாஜக  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கமலை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அதிமுக அரசு மீது குறை சொல்ல  மறைந்த முதலமைச்சர்   ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கமலுக்கு தைரியம் இருந்ததா? இப்போது மட்டும் ஏன் குறை கூறுகிறார் என கேள்வி எழுப்பினார்.

சினிமா துறையின் கஷ்டப்படுகிற குடும்பங்களுக்கு உதவி செய்வதில் கமல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  அதோடு முதலில் சினிமா துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தாலே போதும்,  அரசியலைப் பற்றி பின்பு பார்க்கலாம் என மிகக் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏன் பேசுகின்றார் என்று கமலை விமர்சித்துள்ளார்.

மேலும், கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்த ஸ்டாலினையும்  தமிழிசை காய்ச்சி எடுத்துள்ளார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்றதில் தலையிடுகிறார் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.