அதிமுகவின் சின்னத்தில் வெற்றி பெற்றதாலேயே அந்த கட்சியினரின் தவறான முடிவுகளுக்கு எல்லாம் என்னால் கட்டுப்பட முடியாது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த ஜி.எஸ்.டி. வரி, நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா போன்ற பல விவகாரங்களில் எடப்பாடி அரசு, பல்வேறு சமரசங்களை செய்துள்ளது. இவற்றிற்கெல்லாம் எங்களால் ஒத்துப்போக முடியாது என்று கூறினார்.

மறைந்த ஜெயலலிதா எந்த முடிவு எடுத்தாலும் அதில் தமிழக நலனும், மாநில உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருக்கும். ஆனால், எடப்பாடி அரசோ, அதுபோன்ற நிலையில் இல்லை என்பது வேதனையான விஷயம் என்றார். மத்திய பாஜக அரசு கொடுக்கும் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய எடப்பாடி அரசிடம் இல்லை என்றார்.

கருணாஸ், தனியரசு, நீங்கள் மூவரும் கூட்டணியாக செயல்படுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த தமிமுன் அன்சாரி, எங்கள் மூவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. மாட்டிறைச்சி தடை விவகாரம், பேரறிவாளன் விடுதலை, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் இணைந்து குரல் கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நீங்கள் தற்போது அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறீர்களே கேள்விக்கு பதிலளித்த அவர், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் முடிவு. தனிச்சின்னத்தில் போட்டியிடவே நாங்கள் விரும்பினோம்.

அரசியல் கருதி நாங்கள் சிறிய சமரசம் செய்து கொண்டோம். அதற்காக அதிமுகவுக்கு நாங்கள் அடிமை சாசனம் எழுதித் தரவில்லை. திமுக சார்பில், நடத்தப்படும் முரசொலி விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இது அரசியல் நாகரிகத்தின் அடையாளம். அதனால் நாங்கள் திமுக பக்கம் சாய்வதாக நினைக்க வேண்டாம் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.