அண்மைக்காலமாக மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவருமான தம்பிதுரை, பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார், மேலும் பாஜகவையும் அதன் தலைவர்களையும் கிழிகிழியென கிழித்து வருகிறார். இதனால் முதலமைச்சர் உட்பட பல அதிமுக தலைவர்களும், அமைச்சர்களும் தம்பிதுரை மீது அதிருப்தியில் உள்ளனர்.

அதே  நேரத்தில் தம்பிதுரையின் கருத்துகள், அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல, என தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வருகின்றனர். ஆனாலும் தமிபிதுரை பாஜகவுக்கு எதிராக இன்னும் கடுமையாக பேசி வருகிறார்.


அண்மையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் அதனை வரவேற்றுப் பேசினர். ஆனால் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை கடுமையாக தாக்கிப் பேசினார். 
 
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதலமைச்சர்  கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் தான் அது தெரியும் என கூறினார்..

பாஜகவை நான் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்? திராவிடக் கட்சிகளை தமிழ்நாட்டில் வரவிட மாட்டோம் என்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? தேசியக் கட்சி என சொல்லிக்கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்? என  தம்பிதுரை கடுமையாக பேசினார்.