Thambidurai Deep Discussion with CM Edapadi K Palanisamy
வருமான வரி சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், முதல்வர் பதவிக்கு சிக்கல் வரும் என்று எடப்பாடியிடம் தம்பிதுரை எச்சரித்துள்ளார்.
மத்திய அரசிடம் நேரடி தொடர்பில் இருப்பவர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அதனால், மத்திய அரசின் எண்ணத்தை அறிந்த அவர், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே தினகரனிடம் கூறினார்.
தினகரன் அதை ஏற்கவில்லை. ஆனால் தற்போது, தினகரனே கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறார். அவரை கட்சியை விட்டு வெளியேற்றும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
மேலும், ஓ.பி.எஸ் அணியும் - எடப்பாடி அணியும் இணைந்து ஒன்று பட்ட அதிமுக உருவாக உள்ளது. அத்துடன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆட்சி அதிகாரத்தில் கொங்கு மண்டலத்தின் கொடியே பட்டொளி வீசி பறக்கிறது.
இந்நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடியை இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்திய தம்பிதுரை, அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்காவிட்டால், உங்களுக்கும் சிக்கல் வரும் என்று எச்சரித்தார்.

இதனால், அச்சமடைந்த எடப்பாடி, அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க முடிவு செய்துள்ளார். அதனால், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ க்களின் ஆதரவின் மூலம் அதை சமாளித்து விடலாம் என்று முதல்வர் நம்புகிறார்.
அத்துடன், தினகரனிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த, அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அமைச்சரவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன் படி, உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராசன், திண்டுக்கல் சீனுவாசன் ஆகியோருக்கும் கல்தா கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.
ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த போது, சசிகலாவிடம் தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர், அவரை தொடர்ந்து அவமான படுத்தி வந்தனர்.

தற்போது சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைத்து மன்னார்குடி உறவுகளின் ஆதிக்கமும் கட்சியில் இருந்து அகலப்போகிறது. இருந்தாலும், தினகரன் ஆதரவு அமைச்சர்கள், தமக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறார் எடப்பாடி.
எனவே, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலமும் இதையே விரும்புவதாக கூறப்படுகிறது.
