* பொதுமக்கள் அரசியலை விட்டு விலகி நிற்க கூடாது. ட்விட்டரில் கருத்து தெரிவித்துவிட்டு தூரம் போய்விட கூடாது. ஓட்டு கேட்டு வருபவர் சேவைக்காக வருகிறார? அல்லது பதவிக்காக வருகிறாரா! என அலசி ஆராய்ந்து ஜனநாயக கடமையை செய்ய வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி. 
(ஆஹா கருப்பன் அரசியல் கருத்துச் சொல்ல ஆரம்பிச்சுட்டான். பயபுள்ள அவனும் நடிகன் தானே, அவருக்குள்ளேயும் ஆசாபாசங்கள் இருக்கும்தானே? வா தர்மா, மக்க கலங்குதாப்பா, உன் கை பிடிச்சு இழுக்குதாப்பா?)

* தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் வேலை வழங்கப்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்குது. தமிழகத்தின் நிதி நிலை பற்றி எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு தெரியலை போல: அமைச்சர் சம்பத். (ஆஹா ஆஹா சம்பத்து, நீங்க தான் தெகிரியமான அமைச்சர். கடந்த எட்டு வருஷமா ஆண்டு அனுபவிச்சதுல கஜானாவ உங்க கட்சி காலி பண்ணி வெச்சிருக்கிற கொடுமை பாவம் எதிர்கட்சி தலீவருக்கு தெரியல போல. மாநிலமே வறுமைக்கோட்டுக்கு கீழே கெடக்குறப்ப, ரெண்டாயிரம் கொடுக்க மட்டும் எங்கே இருந்து மந்திரியாரே காசு வருது?)

* நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்களின் மனது வருத்தப்படும். அதனாலேயே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம்: தீபா. (அய்யய்ய்யே இந்தப் புள்ள வேற குறுக்கா மறுக்கா  பொம்மையை உருட்டி விளையாடிட்டு திரியுது. பேபிம்மா பனிரெண்டு மணிக்கு ஏந்திரிச்ச நீ, பல்ல வெளக்காம காஃபி குடிக்காதேன்னு எத்தினிவாட்டி சொல்றது)

* அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, தனியாக கட்சி ஆரம்பித்தவர்கள், ஜாதி கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதே கிடையாது. ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரது வீட்டிற்கே கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்துச் சென்று சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்களும் நன்றி மறந்துவிட்டனர்: ஓ.பன்னீர்செல்வம். (சரி சரி புரியுதுங்க பன்னீர் சார். தேனியில இப்படி உங்க மயன சுத்திச் சுத்தி தங்கம், இளங்கோவன்னு பெரிய கைகள்  முறுக்கிட்டு நிக்குறதுல பயந்துடீடிக.  நன்றி மறந்ததை பற்றி நீங்க பேசலாமா?ன்னு தினகரன் கேக்குறதுக்கு என்ன பதில் வெச்சிருக்கீக?)

*  அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றாக விஜயகாந்த் முதல்வராகும் வகையில்  அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியில் தோல்விக்கு சில கட்சிகளின் தவறே காரணம். இதே தவறை தி.மு.க. கூட்டணியிலும் செய்து, ஸ்டாலின் டீமை தோற்கடித்த பின்னரே வைகோ அங்கிருந்து வெளியேறுவார். அவரால் நாங்கள் பெற்ற பாதிப்பை, ஸ்டாலினும் பெறுவார். : சுதீஷ். (மச்சான் சுதீஷூ, அ.தி.மு.க கூட்டணியில போயி சேர்ந்து, அமர்க்களமா சீட் வாங்கி, முதல்வரே உங்களோட பிரசாரத்துக்கு வந்த பிறகும் கூட பழைய கதையை பேசி, அ.தி.மு.க.வை இடிக்கிற உங்க தகிரியத்துக்கு பெரிய பூங்கொத்து பாஸு. ஆனா ஸ்டாலின் மேலே அப்படியென்ன பாசம்?)