மு.க.ஸ்டாலின் பத்து மேடைகளில் பேசுவதைவிட 10 நிமிஷம் ரஜினியின் கருத்து பிரபலமாகிறது என அரசியல் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் கட்சி தொடங்குவார். மு.க.ஸ்டாலின் பத்து மேடைகளில் பேசுவதைவிட 10 நிமிஷம் ரஜினியின் கருத்து பிரபலமாகிறது. ரஜினியின் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்.

 ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்வார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ரஜினிகாந்த் முதல்வராவார். இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியமைப்பார்" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சமயத்தில் அவர், "திமுகவுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையேதான் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிருக்கும். இதில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார். இந்த வாய்ப்பு ஸ்டாலினுக்கு நிச்சயம் கிடைக்காது" என்று தெரிவித்திருந்தார். அதிமுகவை கணக்கிலேயே வைத்து கொள்ளவில்லை என்றாலும் அன்று சொன்னதையே இன்றும் சொல்லி ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று சொல்லி திமுக வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளார் கராத்தே.