ஹைதராபாத்: சட்டசபை கலைக்கப்படுவதற்கு முன்னரே தெலுங்கானா அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிப் பறக்க விடுகின்றன.

2014 சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்துப் போட்டது.

தற்போது சட்டசபை பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே கலைக்க பரிந்துரை செய்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். இதையடுத்து சட்டசபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கலைப்புக்கு முன்னரே தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளிவிட தொடங்கிவிட்டன. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்கள் வீடு கட்டுவதற்காக ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும் எஸ்சி எஸ்டி குடும்பங்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை வழங்கப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

அதேபோல் எஸ்சி எஸ்டி குடும்பங்களுக்கு மாதத்துக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள், 10 லட்சம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ3,000 நிதி உதவி என அடித்துவிட்டிருக்கிறது காங்கிரஸ். தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவோ, டெல்லி அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டைப் போல மாநில கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறுவதுடன் குடிநீர், நிதி உதவி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அமல்படுத்தியிருக்கிறோம் என்றும் தெரிவித்து வருகிறது.