சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்துப் பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழகத்திற்கு அரசு முறைப் பயணமாக குடும்பத்துடன் நேற்று இரவு தமிழகத்திற்கு வந்த சந்திரசேகர ராவ் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்தார். தென்னிந்தியா மற்றும் வட இந்திய மாநிலங்களிடையே நெல் கொள்முதல் திட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (13/12/2021) தனி விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற தெலங்கானா முதலமைச்சருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடும்பத்தினருடன் அவர் சாமி தரிசனம் செய்தார். அதேபோல், கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (14/12/2021) விமானம் மூலம் சென்னைக்கு வந்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

தனது வீட்டு வாசலில் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து தெலங்கானா முதலமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்து கொடுத்தார். பின்னர், தனது அலுவலகத்துக்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து சென்றார். இந்த சந்திப்பின் போது, காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம், 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன. இந்த சந்திப்பின் போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.