telangana chief minister chadrasekar rao will meet stalin tomorrow

தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியுமே தேசிய அளவில் பிரதான கூட்டணிகளாக உள்ளன.

இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் இதற்கான முதல் குரலை எழுப்பினார். அதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார் மம்தா பானர்ஜி. காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு மூன்றாவது அணிக்கு ஆதரவு கோரினார்.

பிராந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதை காட்டிக்கொள்ளாமல், ஸ்டாலின் வாழ்த்து தானே தெரிவித்தார்; ஆதரவு தெரிவிக்கவில்லையே? என கூறிவருகின்றனர். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் இதே விளக்கத்தைத்தான் அளித்தார்.

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி தீவிரமாக நடந்துவரும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதியை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நாளை சந்திக்கிறார். வயது முதிர்வால் அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்துவரும் திமுக தலைவர் கருணாநிதியை தமிழ்நாட்டை கடந்து தேசிய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை சென்னை வரும் சந்திரசேகர் ராவ், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்திக்கிறார். அதன்பிறகு ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாகவும் அப்போது மூன்றாவது அணிக்கு ஆதரவு கோரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது கண்டிப்பாக மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது அணி குறித்த முதல் குரலை எழுப்பிய சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் இந்த சந்திப்பு குறித்து மனதை தேற்றிக்கொள்ளும் கருத்துகளை காங்கிரஸார் கூறினாலும், அவர்களிடையே அதிருப்தி நிலவுவதுதான் உண்மை எனவும் கூறப்படுகிறது.