மறைந்த ஜெயலலிதாவின் லட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம் என்றும் அணிகள் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா ஆன்மாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளர்.

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக அணிகள் இன்று இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சராகவும், மாஃபா. பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறை அமைச்சராகவும் பதவி அளிக்கப்படும் என்று அணிகள்
இணைப்பின்போது அறிவிக்கப்பட்டது.

பின்னர், சென்னை, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மாஃபா. பாண்டியராஜனுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் பின்னர், சென்னை தலைமை செயலகம் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அணிகள் இணைப்பு குறித்து, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சி குறித்து யார் சொன்னாலும் எதுவும் நடக்காது என்று கூறினார். 

மறைந்த ஜெயலலிதாவின் லட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம் என்றும் ஜெயக்குமார் உறுதி கூறினார்.

அணிகள் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா ஆன்மாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.