இதெல்லாம் ரொம்ப தப்புங்க! 3 நாட்களாக உண்ணாவிரம் இருக்கும் ஆசிரியர்களை இப்படி கண்டுக்காமல் இருக்கலாமா? டிடிவி
பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களை பணி நியமனம் செய்ய வேண்டுமானால் மேலும் ஒரு தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தும் அரசாணை கடந்த 2019ஆம் ஆண்டு பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை எதிர்த்ததை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போதும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களை தமிழக அரசின் சார்பில் இதுவரை அழைத்து பேசாததைக் கண்டிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.