அனில் அம்பானியின் 1100 கோடி ரூபாய் வரி பாக்கி தள்ளுபடி… மீண்டும் புயலைக் கிளப்பும் ரஃபேல் விவகாரம் !!
பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் ரக போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியா சார்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்றனர்
.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அனில் அம்பானியின் நிறுவனம் பலன் அடைந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முக்கிய ஊடகமான லீ மான்டே (Le Monde) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ’பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி அறிவித்த சில மாதங்களில் அனில் அன்பானி நிறுவனம் பிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணம் 151 மில்லியன் யூரோவில், 143.7 மில்லியன் யூரோ தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம், 7.3 மில்லியன் யூரோ பணம் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து வரி வசூல் செய்யப்பட்டது. இது சட்டவிரோதமானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தி, பிரான்ஸில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில், ‘பிரான்ஸ் நாட்டுக்கு வரி செலுத்த வேண்டிய விவகாரத்தில் எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. பிரான்ஸ் நாட்டில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் விதிமுறைப்படி தான் வரி செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் வருவாய் துறை அதிகாரிகள் குறிப்பிடும் 2008-2012 காலக்கட்டத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ரிலையன்ஸ் அட்லான்டிக் ஃப்ளேக் ஃபிரான்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. அந்தக் காலத்துக்கு பிரான்ஸ் வருவாய் அதிகாரிகள் 1,100 கோடி ரூபாய் வரி செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர். பிரான்ஸ் நாட்டு வரி செலுத்தும் சட்டப்படி, இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இறுதியாக 56 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், ’ரஃபேல் விமானத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தையும், தனியார் நிறுவனத்துக்கு வரி விலக்கு அளித்த விவகாரத்தையும் யூகத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு செய்தி வெளியாகியுள்ளது. வரி விலக்கு விவகாரத்தையும், ரஃபேல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தியிருப்பது தவறானது’ என்று விளக்கமளித்துள்ளது.