Tasmac : தமிழகத்தில் கொரோனா தீயாய் பரவ காரணமே டாஸ்மாக்தான்.. ஸ்டாலின் அரசு மீது பழியைப் போட்ட ஓபிஎஸ்!
திமுகவின் வாதப்படி 8 சதவீத பாதிப்பு உள்ள நிலையில் தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் திறந்து வைத்திருக்கிறது.
கொரோனா வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் கடந்த 27.12. 2021 அன்று கொரோனா தொற்று 605 ஆக இருந்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து 3.1. 2022 அன்று 1,728 ஆக அதிகரித்தது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை எனப் பல புதிய கட்டுப்பாடுகள் 5.1. 2022 அன்று விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி அரசு வாயே திறக்கவில்லை.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அன்று 4, 862 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 10, 978 ஆக அதிகரித்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதிருப்பதுதான். கடந்த ஆட்சி காலத்தில் கொரோனா பாதிப்பு இருந்தபோது தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் உட்பட திமுகவினர் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மது கடைகளை திறக்கக் கூடாது என்று திமுக அப்போது வாதிட்டது.
நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி சுமார் 8 % பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். திமுகவின் வாதப்படி 8 சதவீத பாதிப்பு உள்ள நிலையில் தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் திறந்து வைத்திருக்கிறது. கொரோனா வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்கு தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்று அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.