பாதிக்கப்படும் மக்கள் கண்ணீர் துடைக்காமல், அதிமுக அரசு நடவடிக்கைகள் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் எனில் நாடு அமைதி கொள்ளாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஆர். முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே 17ம் தேதி வரை நீடிப்பது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி படிப்படியாக இயல்புநிலைக்குச் செல்லும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
நகரப்புறங்களைச் சார்ந்தே தொழிற்சாலைகள் பெருமளவில் அமைந்துள்ள நிலையில் கிராமப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது வெறும் அறிவிப்பாகவே இருக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், மாநில அரசு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், அயல் நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்புவது குறித்து எந்த ஏற்பாடும் அறிவிக்கவில்லை.


கடந்த 40 நாள்களாக வேலை இல்லாமல் அரசு வழங்கிய நிவாரணப் பொருள்களையும், தன்னார்வலர்கள் கொடுத்து வரும் உதவியிலும் அரைகுறை உயிர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தப் பெரும் பகுதி குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்திய கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை. கொரானா நோய் பெருந்தொற்று குறித்து பரிசோதனை செய்வதை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய ரூபாய் 6 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா நோய் தொற்று தடுப்பு என்கிற பெயரில் ஜனநாயக நடைமுறைகள் கைவிடப்படுகின்றன. பாதிக்கப்படும் மக்கள் கண்ணீர் துடைக்காமல், அதிமுக அரசு நடவடிக்கைகள் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் எனில் நாடு அமைதி கொள்ளாது என்பதை சுட்டிக்காட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அதிமுக அரசை எச்சரிக்கை செய்கிறது.” என முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.