காமராஜர் தோல்விக்குக் காரணமான திமுகவினர் காமராஜரைப் பற்றி பேசக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை காமரஜர் அரங்கத்தில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் பங்கேற்று பேசியபோது, “காமராஜர் உட்கார்ந்த தமிழக முதல்வர் நாற்காலியில் கழிசடைகள் அமர்ந்திருப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது” என்று எடப்பாடி பழனிச்சாமியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பேசினார். இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார். 
கடலுாரில் நெல்லிக்குப்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை பேசும்போது, “காமராஜர் தோல்விக்குக் காரணமாக இருந்தவர்களே திமுகவினர்தான். எனவே காமராஜரைப் பற்றி அவர்கள் பேசக் கூடாது. மூப்பனார் பிரதமர் ஆவதையும், அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக ஆவதையும்கூட தடுத்தவர்கள் திமுகவினர்தான். இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.” என்று விமர்சனம் செய்தார்.
மேலும் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “மத்திய அரசிடம் தமிழக அரசு கைகட்டி நிற்பதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே, அப்போது திமுக என்ன செய்தது? காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் நிலையை நடிகர் ரஜினி ஆதரித்ததற்கு அவருக்கு நன்றி. எதிர்காலத்தில் அவருடன் கூட்டணி அமையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்று தெரிவித்தார்.