வெளிநாடுகளிலிருந்து ஆன்மிகச் சுற்றுலாவிற்காக இந்தியா வந்த இஸ்லாமியர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஜனவரி மாதமே கேரளாவில் கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில்,  மத்திய அரசின் அலட்சியப்  போக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததுமே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். சீனாவில் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நிலையில் அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியபோதும்கூட இந்தியா எவ்வித முன்னேற்பாடும் இன்றி தமிழகத்தில் சிவராத்திரி விழா போன்றவைகள் அனுமதிக்கப்பட்டது. அதில் பல லட்சம் பேர்  கலந்து கொண்டது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மார்ச்-16ஆம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த நிலையில் டெல்லி தப்லீக் மாநாடு உடனடியாக நிறுத்தப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுக்கு தப்லீக் மாநாடு காரணம் என்ற தொனியில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்த வெளிநாட்டினர் சிலர் மீதும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. டெல்லி தப்லிக் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் இந்திய அரசிடம் முறைப்படி விசா பெற்று நாட்டிற்குள் வந்தார்கள், இந்தியாவில் நடக்கும் எந்த மதத்தின் மதப்பிரச்சாரமாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவருக்கு சாதாரண சுற்றுலா விசாவே வழங்கப்பட்டு வருகின்றது, ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர் மீது மட்டும் சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் செய்தார்கள் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கைது செய்யப்பட்டோர் மீதம் இதுபோன்ற வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வெளியிட்டிருந்த தீர்ப்பில் தப்லீக் ஜமாஅத்தினர் கொரோனா பரப்பிதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை, 70 நாட்களுக்கு மேலாக அவர்கள் அனுபவித்த சிறைவாசமே போதுமானது,

அவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். ஆனால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் இதுவரைக்கும் அவர்களை வெளியே விடாமல் தமிழக அரசு அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் செயல் நீதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகும், பிணை வழங்கப்பட்ட நிலையிலும் அவர்களைத் தொடர்ந்து கைதிகள் போல் நடத்துவதால் தமிழக அரசு நீதித்துறைக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது, கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உடனடியாக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனவே வெளிநாட்டைச் சேர்ந்த தப்லீக் ஜமாஅத்தினர் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக  விரைவு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.