ஓ பன்னீர்செல்வம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய துணை முதலமைச்சர். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமாக இருந்த டாக்டர் தமிழிசை, ஓபிஎஸ் பிஏ மூலமாக அப்பாயின்மென்ட் வாங்கி நேரத்தை ஒதுக்கி தான் பார்க்க முடியும். 

ஜெயலலிதா இருந்த காலத்தில் அதற்கு கூட சாத்தியம் கிடையாது. ஆனால் தற்போது அதற்கு நேர்மறையான காட்சியாக மாறிப் போயுள்ளது. தமிழிசையின் பதவியேற்பு வைபவம் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

ஆளுநர் மாளிகையின் உட்புறத்தில்  இருந்து தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்பதற்காக மேடை அருகே வந்தபோது ஒட்டுமொத்தமாக தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் நீதிபதிகள் அந்த விழாவில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்க சென்று இருந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே சந்திரசேகர் ராவின் மகன் அமைச்சர் தாரக ராமாராவ் கே சி ஆர்- இன் மற்றொரு உறவினர் அமைச்சருமான ஹரிஷ் ராவ் இமாச்சல பிரதேச ஆளுநராக பதவியேற்கவுள்ள பண்டாரு தத்தாத்ரேயா என அத்தனை பேரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர்.

 அந்த அளவிற்கு ஒரே நாளில் தமிழிசையின் புரோட்டோகால் மாறிவிட்டது. தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவுடன் நேராக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து அவரது தந்தையார் குமரி ஆனந்தன் மற்றும் தாய் கிருஷ்ணவேணி ஆகியோரின் கால்களில் விழுந்து தமிழிசை ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். 

பின்னர் ஓபிஎஸ் மற்றும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த தலைவர்களை மட்டும் சந்தித்து விட்டு தமிழிசை மீண்டும் மேடைக்கு சென்று விட்டார். போராட்டமே வாழ்க்கை என்ற அளவிற்கு கடந்த 10 வருடங்களாக தமிழிசையின் அரசியல் வாழ்க்கை இருந்துவந்தது. அதற்கு விடை கொடுக்கும் வகையில், அமைதியான முறையில் கௌரவமான முறையில் முடிவுகள் எடுக்கும் இடத்தில் தற்போது அமர்ந்துள்ளார் தமிழிசை. அவருக்கு நாமும் நமது வாழ்த்தை தெரிவிப்போம்.