Asianet News TamilAsianet News Tamil

காய்கறி, மளிகைபொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால்... உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை...!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tamilnadu Minister warns vegetables and fruit price hike
Author
Chennai, First Published May 23, 2021, 11:45 AM IST

தமிழகத்தில் நாளை முதல் கட்டுப்பாடுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் கூட செயல்படாது என்றும், நாளை முதல் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு மளிகை, காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே காய்கறிகள் விண்ணை முட்டும் விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Tamilnadu Minister warns vegetables and fruit price hike

ஒரு கிலோ ரூபாய் 10க்கு விற்கப்பட்ட தக்காளி ரூபாய் 50 ஆகவும், உருளைக்கிழங்கு ரூபாய் 30- லிருந்து ரூபாய் 60 ஆகவும், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் குற்றச்சாட்டி வந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tamilnadu Minister warns vegetables and fruit price hike

இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொரோனா பெருந்தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நாளை (24/05/2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினைப் பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. 

Tamilnadu Minister warns vegetables and fruit price hike

இது மக்களை சுரண்டும் ஒரு செயல். இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை ஏற்படும் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும், தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios