தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி பேசிய திமுக எம்பி தயாநிதிமாறனுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுகவின் வாடிக்கை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.  திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் ,  இந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அங்கு பேசிய தயாநிதி மாறன் ,  தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார்.நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.  தயாநிதி மாறனின் இந்த பேச்சு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி வெறி எண்ணம் அவரது ஆழ் மனதில் ஊன்றியிருப்பதையே இது காட்டுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

இது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர், சென்னையில் உள்ள 658 அம்மா உணவகங்களில் 7.5 லட்சம் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள 26 லட்சம் பேருக்கு தலா 3 முககவசங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். மதுக்கடைகளை மூடுவது என்பது சமூக பிரச்சனை. மக்கள் மது வாங்க வராவிட்டால் டாஸ்மாக் கடைகளை அரசு திறக்காது என்றார். தமிழகத்தில் மது கடத்தல் அதிகமாகும் என்பதால் தான் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வருவது அதிமுகவின் லட்சியம். ஆனால் அதற்கு இன்னும்  கொஞ்ச  காலம் தாமதமாகும் என தெரிவித்தார். 

தமிழக மக்களுக்கு குடி பழக்கத்தை கற்று கொடுத்ததே திமுக தான். திமுகவினர் வைத்துள்ள மது ஆலைளை மூடி முன் உதாரணமாக செயல்பட முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். அதே போல் திமுக எம்பி தயாநிதி மாறன் பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் பட்டியலின மக்களை தொடர்ந்து அவமரியாதை செய்வது திமுகவுக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.  ஏற்கனவே அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி பேசினார் இப்போது தயாநிதி மாறன் பேசியுள்ளார்.   தாழ்த்தப்பட்ட இன மக்களை அவமதித்த திமுக எம்.பி கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறனுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என  அவர் கூறினார்.