Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் கஜானா காலி! புயல் நிவாரணப் பணிகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பு!

தமிழக அரசின் கஜானாவில் போதுமான பணம் இல்லாததே கஜா நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Tamilnadu Govt Locker is very empty
Author
Chennai, First Published Nov 22, 2018, 9:04 AM IST

கஜா புயல் முன்னெச்சரிக்கை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பாராட்டுகளை குவித்த எடப்பாடி பழனிசாமி அரசு புயலுக்கு பிந்தைய பணிகளில் தடுமாறுவதை காண முடிகிறது. சுமார் 2 லட்சம் பேர் வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசே கூறுகிறது. ஆனால் இவர்களுக்கு ஒரு வேளை உணவு கூட வழங்க முடியாத நிலை உள்ளது தான் நிதர்சனம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு முன்னதாக இந்த முகாம்களுக்கு தலா 2 முதல் நான்கு ரேசன் அரிசி மூட்டைகள், பருப்பு மற்றும் சில காய்கறிகளை கொடுத்த அதிகாரிகள் அதன் பிறகு முகாம் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. நாகை, திருவாரூர் போன்ற நகரங்களில் ஒரு இடத்தில் சமைக்கப்படும் உணவு ஒவ்வொரு முகாமாக கொண்டு சென்று வழங்கப்படுகிறது.

Tamilnadu Govt Locker is very empty

இப்படி தமிழக அரசு கொடுக்கும் உணவு ஒரு வேளைக்கு கூட போதாது என்கிறார்கள் அங்கிருப்பவர்கள். அதே சமயம் தன்னார்வலர்கள் கொடுத்து அனுப்பிய பன், பிஸ்கெட் போன்ற உணவுப் பொருட்களை தாராளமாக முகாம்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர். மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்க முடியாததற்கு தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புயல் நிவாரணத்திற்கு என்று 1000 கோடி ரூபாயை உடனடியாக தமிழக அரசு விடுவித்தாலும் கூட அது சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. துயரத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசின் கஜானாவில் எதிர்பார்த்த அளவிற்கு பணம் இல்லை என்கிறார்கள். வழக்கமாக இது போன்ற புயல் சமயங்களில் மக்களின் கோபத்தை சமாளிக்க ஜெயலலிதா அதிரடியான ஒரு திட்டத்தை செயல்படுத்துவார்.

அதாவது புயலோ, கனமழையோ காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டால் மறுநாளே ஒரு ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அல்லது 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவிப்பார். கடந்த 2008ம் ஆண்டு ஜெயலலிதா முதல்முறையாக இந்த திட்டத்தை அறிவித்தார். அதன் பிறகு தமிழகத்தில் இயற்கை பேரிடர் ஏற்படும் சமயத்தில் எல்லாம் உடனடியாக ஜெயலலிதா ரேசன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் பண உதவி அறிவித்துவிடுவார்.

Tamilnadu Govt Locker is very empty

கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது கூட ரேசன் அட்டை தாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் கோபம் தணிந்து நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதே பாணியில் தற்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் தமிழக அரசின் கஜானாவின் நிலைமை தான் என்கிறார்கள் அதிகாரிகள்.

புயல் கரையை கடந்து ஒரு வாரத்திற்குள்ளாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு ஓடுவதும் கூட பிரதமரை சந்தித்து எவ்வளவு தொகையை முதற்கட்டமாக வாங்க முடியுமோ அதனை பெற்று நிதி உதவி அறிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு ரேசன் கார்டுக்கு இவ்வளவு பணம் என்று அறிவித்து விநியோகத்தை துவங்கிவிட்டாலே மக்களின் கோபம் குறைந்துவிடும் என்று நம்புகிறது தமிழக அரசு. 

Follow Us:
Download App:
  • android
  • ios