நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைப்பதை தமிழக அரசு நிறுத்தியபாடில்லை.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது. உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் போட்டோக்களை போட்டு பேனர்களோ வைக்கக்கூடாது. இதை உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து கோவையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி கீழே விழுந்த ரகு என்ற இளைஞரின் மீது லாரி ஏறி உயிரிழந்தார். ரகுவின் உயிரிழப்புக்கு காரணம் சாலையை ஆக்கிரமித்து அலங்காரவளைவு வைக்கப்பட்டிருந்ததுதான் என கோவை மக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் அலங்கார வளைவுகளும் பேனர்களும் அகற்றப்பட்டன.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தமிழக அரசு, அலங்கார வளைவு அமைத்ததுதான் ரகுவின் உயிரிழப்புக்காரணம் எனவும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தொடர்ந்த வழக்கில், ரகுவின் உயிரிழப்புக்கு பேனர் தான் என்பது தெளிவாக தெரிவதாகவும் கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசின் பேனர் கலாச்சாரத்தையும் பேனர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அரசு செயல்படுவதாகவும் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அதனால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களை போட்டு பேனர்கள் வைக்கமுடியாத கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் பேனர்களில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் புகைப்படங்கள் அண்மைக்காலமாக வைக்கப்படும் பேனர்களில் இடம்பெறுவதில்லை.

ஆனால், சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து பேனர்கள் வைப்பதை மட்டும் தடுக்க முடியவில்லை. நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில், மெரினா கடற்கரை மற்றும் கடற்கரை சாலையின் கிளை சாலைகளில் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்கள் நடந்து செல்வதற்காக இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நடைபாதையில் நடந்துசெல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக அந்த பேனர்களில் முதல்வர், துணை முதல்வர் என யாருடைய புகைப்படங்களும் இடம்பெறவில்லை.

அப்படியே சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து பேனர் வைப்பதையும் நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு..