“கடந்த காலத்தில் அரசுப்பணிகளில் நேரடியாக மாநில அரசுப்பணியாக இருந்தாலும், மாநகராட்சி, பஞ்சாயத்து என உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தாலும் தமிழர்களுக்கே வேலை கிடைக்க வேண்டும்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழருக்கே கிடைக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தமிழக மின் வாரியத்தில் வட மாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டது சர்ச்சையானது. இதனையடுத்து தமிழக அரசுப் பணிகள் மண்ணின் மைந்தர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழருக்கே கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட முன்வடிவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

அதைத்தொடர்ந்து இன்றைய தினமே அந்த சட்ட முன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதா மீது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், “தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளிலும் தமிழர் அல்லாதோர் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதில் அளித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “கடந்த காலத்தில் அரசுப்பணிகளில் நேரடியாக மாநில அரசுப்பணியாக இருந்தாலும், மாநகராட்சி, பஞ்சாயத்து என உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தாலும் தமிழர்களுக்கே வேலை கிடைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணிகளில் சேர முடியும் என்று அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்பிறகு புதிதாக இதுவரை எந்தப் பணி நியமனங்களும் செய்யப்படவில்லை. இனி வர உள்ள அனைத்து பணி நியமனங்களும் தமிழர்களுக்கே வழங்கும் நிலையில்தான் இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், மாநகராட்சிகள், பஞ்சாயத்துகளிலும், தேயிலை கழகம் என அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களே பணியில் சேரும் நிலை இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் உருவாகி உள்ளது” என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.