காவிரி விவகாரம் தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் மத்திய அரசு அவகாசம் கேட்டதை கண்டித்து, உச்சநீதிமன்ற வளாகத்தில் தமிழக விவசாயி ஒருவர் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உருவானது.  

காவிரி இறுதி வழக்கின் இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கான நீரை 192 டி.எம்.சியிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்ட கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. 

இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்குகளை கடந்த ஏப்ரல் 9ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே 3ம் தேதிக்குள் காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அந்தவகையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால், காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்க முடியவில்லை. எனவே மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, கர்நாடகாவில் தேர்தல் குறித்து நீதிமன்றத்துக்கு கவலையில்லை. இதுவரை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு மே மாதம் தர வேண்டிய 4 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கோரிய வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் கோரிய மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி விவகாரத்தில் அலட்சியத்துடன் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசை கண்டித்து விவசாயி ஒருவர் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.