தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு  பணிகளுக்காக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களில் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக தமிழகமெங்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் வகையில், காற்றழுத்த கிருமிநாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 25 இருசக்கர வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3-6-2020 அன்று வழங்கினார். 

 அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனங்களில் கிருமி நாசினி தெளித்திட தண்ணீரை பனித் திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மற்றும் பேரிடர் கால மீட்பு பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரப்பர் இயந்திர படகுகள் பொருத்தப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு வாகனங்கள் சென்னையில் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களில் ஏற்படும் தீயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயரிந்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களும் உள்ளடக்கமாகும்,  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் 1, 571 பேர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 66 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஏற்கனவே இது குறித்து தெரிவித்த முதலமைச்சர் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிக சவாலாக உள்ளது, குறுகலான சாலைகள், நெருக்கடியான தெருக்கள் அதிகம் என்பதால் அப்பகுதிகளில் தொற்று வேகமாக பரவுகிறது என கூறியிருந்தார்.  இந்நிலையில் அதுபோன்ற பகுதிகளில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள  தமிழக அரசு இந்நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடதக்கது.