தமிழகம் முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் ,  மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக நான் கருதுகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் ஒரு வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் காவல் மற்றும் வருவாய் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி  அமைப்பினை சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையும் மறந்து தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர் .  ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது  . 

எனவே களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான்  ஏற்கனவே அறிவித்து இருந்தேன் ,  இவர்களது பணியினை நாடே போற்றி நன்றி பாராட்டி கொண்டிருக்கிறது .  உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை இறைவனுக்கு நிகராக நான் கருதுகிறேன் . கொரனா நோய் தொற்றுக்கு ஆளாகி  இறக்கு நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது . ஆனால் மருத்துவப் பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி தங்களின் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கும் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது .  அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் . 

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது "  என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க தன்னலம் கருதாமல் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .  இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும் மருத்துவர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மாண்புமிகு அம்மாவின் அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் ,  என அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .