காஷ்மீரில் நடந்ததைபோல் தமிழகத்தில் நடைபெறக்கூடாது என்பதால் தான் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புரசைவாக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தயாநிதி மாறன், ’’காஷ்மீர் பிரச்சனை பற்றி பலருக்கு தெரியவில்லை. 

காஷ்மீரில் நடைபெற்றது போல் தமிழகத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக தான் திமுக அதனை எதிர்க்கிறது. காஷ்மீரில் சட்டமன்றம் கலைத்தபோது ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆளுநர் யார்? மக்களால் தேர்வு செய்யப்பட்டவரா? சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் ஏன் நடத்தினர்? 

காஷ்மீரில் இன்று வரை பலர் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் போல் உள்ளது’’ என அவர் விமர்சித்தார்.