பளிச்சென்று எதுவுமே இல்லாத பட்ஜெட்டை பக்குவமாக வாசித்துவிட்டு கமுக்கமாக உட்கார்ந்துவிட்டார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட் வேலைக்காகாதது, வேகாதது, உருப்படாதது...என்று எதிர்கட்சி தலைகள் ஆளாளுக்கு போட்டுப் பொளந்து கொண்டிருக்கின்றனர். அதைப் பற்றி பன்னீர் ஒண்ணும் கண்டுக்கவேயில்லை. 

ஆனால் டி.டி.வி. தினகரன் செய்திருக்கும் கோர்த்துவிடுதல் வேலைதான் பன்னீரை கோக்குமாக்காக கலவரமாக்கி உள்ளது. அப்படி என்னதான் செய்தார் தினா?....“என்னங்க பட்ஜெட் இது! அம்மா இருந்திருந்தா இப்படியா இருக்கும்? பற்றாக்குறையும், கடன்களும் நிரம்பி வழியும் பட்ஜெட்டை பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். வருவாயை பெறுக்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவுமே பட்ஜெட்டில் இல்லை. கடன் நாலு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்குது. 

கழுத்தை நெரிக்கும் கடன்களுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்படுது.” என்று வெளுத்தவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பன்னீருக்கு சேதாரமில்லை. ஆனால் அவர் அடுத்து ஒண்ணு சொன்னார் பாருங்க...”மத்திய அரசு எப்படியெல்லாம் தமிழகத்தை ஓரவஞ்சனை செய்து பாடாய்ப்படுத்துகிறது என்பதை பல இடங்களில் பன்னீர்செல்வம் கூறிப் புலம்பியுள்ளார்.” என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

 

இதுதான் பன்னீர்செல்வத்தை ஷாக்காக்கி இருக்கிறது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி பி.ஜே.பி.க்கும் பன்னீர் தரப்புக்கும் இடையில் பெரிய வாய்க்கால் தகராறு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்ற பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்க மறுத்தது பெரிய பிரச்னையாக பேசப்பட்டது. அந்த சம்பவத்துக்குப் பிறகு பி.ஜே.பி.க்கும், பன்னீருக்கும் இடையில் எந்த நட்புறவும் இல்லாதது போலவே சூழ்நிலைகள் இருக்கின்றன. 

ஏதோ ஒரு காரணத்துக்காக பன்னீரும், பி.ஜே.பி.க்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. இந்நிலையில், தினகரன் இப்படி கோர்த்து விட்டிருப்பது அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிலும், நாளைக்கு தமிழகத்துக்கு மோடி வரும் நிலையில் இப்படியொரு வேலையை செய்துவிட்டாரே! ‘பட்ஜெட்டில் நம் அரசை பன்னீர்செல்வம் ’எந்த உதவியும் செய்வதில்லை.’ எனும் ரீதியில் குத்திக்காட்டி பேசி, மக்கள் மனதில் நம்  கட்சி மீது கடுப்பை வளர்த்துவிட்டார்.’ என்று மோடியிடம் தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் கோர்த்துவிட்டால் நம்ம நிலைமை என்னாகும்?” என்று பதறுகிறாராம். இதைத்தானே தினாவும் எதிர்பார்த்தார்!..