தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக உறுப்பினர்கள்  சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .  மாநில தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து  முதல்  முறையாக சென்னை வந்த அவர்  இவ்வாறு கூறினார் தமிழிசைக்குப் பின்னர் தமிழக பாஜகவுக்கு நல்ல தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பில் பாஜக தொண்டர்கள்  காத்திருந்த நிலையில் ,  யாரும் எதிர்பாராத வகையில் எல். முருகனை பாஜக தேசியத் தலைமை தமிழக பாஜகவின்  தலைவராக அறிவித்தது . 

இது கட்சி தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல மூத்த முன்னணி  தலைவர்கள் மத்தியிலும் இந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது ,  ஏனெனில் எப்படியேனும் பாஜக தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என எச். ராஜா ,  பொன்.ராதாகிருஷ்ணன் , சி.பி ராதாகிருஷ்ணன் ,  வானதி சீனிவாசன் ,  நயினார் நாகேந்திரன் ,  இல. கணேசன் ,  கே.டி ராகவன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் காய்களை நகர்த்தி வந்த நிலையில் அது அனைத்தும் எடுபடாமல் போனதே அதற்கு காரணம்.  இந்நிலையில் யாரும் நினைத்துப் பார்த்திராத வகையில் எல். முருகன்  தலைவராக அறிவிக்கப்பட்டார் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   புதிய தலைவராக நியமிக்கப்பட்டு  முதல் முறையாக சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவரை  பாஜக மூத்த தலைவர்கள் , 

பொன் ராதாகிருஷ்ணன் ,  இல. கணேசன் ,  சி.பி , ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  பாஜக எப்போதும் நேர்மறையான அரசியலை தான் எடுத்துச்செல்கிறது .  உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளோம் .  வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் .  சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் இருப்பார்கள் .  தமிழகத்தில் இனி பிரதான கட்சியாக பாஜக இருக்கும்.  வரும் 20 ஆம் தேதியிலிருந்து உரக்கச் சொல்வோம் உண்மையை சொல்வோம் என்ற கோசத்துடன் பேரணி தொடங்க உள்ளோம் என்றார் .