’அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்றவாளுக்கு இவரு ஒரு சிம்ம சொப்பனம்!’- தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அறிவிக்கப்பட்ட போது, சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப்போட்ட பட்டாசு இது. 

சு.சா.  சொன்னது போலவே ப.பு.வும் வந்த புதிதில் செம்ம சீன்ஸ் போட்டதை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது. போராட்டத்துக்கு வழியே இல்லாமல் இருந்த தி.மு.க., கவர்னர் போகுமிடமெல்லாம் பின்னாடியே சென்று, ‘மாநில சுயாட்சியை பறிக்காதே’ என்று பாலிடிக்ஸ் செய்து டைம் பாஸ் பண்ணியதெல்லாம் வேற லெவல் அரசியல். 

இந்நிலையில் கடந்த சில காலமாக தமிழக கவர்னர் கப் சிப்பென்று ஆகிவிட்டார். அவர், நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கியதும் கூட்டைவிட்டு வெளியே வந்து, தனது உரையை ஆத்து ஆத்தென ஆத்தியிருக்கிறார். அவரு பேசிட்டு இருக்கும்போதே வெளிநடப்பு செய்து, வழக்கம்போல் தனது வெற்று அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டது தி.மு.க. இந்நிலையில், பல கட்சிகளின் தலைவர்கள், கவர்னர் உரை பற்றி உதிர்த்த கருத்துக்களின் ஹைலைட்ஸை இங்கே பார்ப்போமா?.... 

* மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்ப வேண்டிய ஆளுநர் உரை, அஞ்சி நடுங்கி முணுமுணுக்கிறது. தொழிலாளர் துறை சீர்கேடுகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநர் கவலைப்படவே இல்லை என்பதை அவர் உரை காட்டுகிறது. மொத்தத்தில் உப்பு சப்பில்லாத வெற்று உரை இது: இ.கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் முத்தராசன். 

* கவர்னரின் உரை மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் தந்துள்ளது. கஜாவால் பாதிக்கப்பட்டோர்களின் நிரந்தர மீள் வாழ்விற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். மாநில உரிமைகளை நசுக்கும் பா.ஜ.க. அரசுக்கு இந்த எடப்பாடி அரசு அடிபணிந்து கிடப்பதை இந்த உரை படம் பிடித்துக் காட்டுகிறது: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. 

* ஆளுநரின் உரை செயலற்ற அரசின் தொகுப்பாகவும், பம்மாத்து மற்றும் பகட்டு வார்த்தைகள் நிறைந்ததாகவும் உள்ளது. நொறுங்கிக் கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வே இல்லை இதில். கவர்னரின் உரையால் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் உருவாகவில்லை. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

* இது ஒரு வெற்று உரை. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கினால் தமிழகம் கடும் நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கிறது. இதை சரி செய்ய மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை வழங்குவது, உள்ளிட்ட எதுவுமே இல்லை இந்த அறிக்கையில்.- ம.ம.க. ஜவாஹிருல்லாஹ்.

* ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்க தக்கவையாக உள்ளது. ஆனால் உழவர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றமே. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பற்றிய தகவல் வரவேற்கத்தக்கது.-பா.ம.க. தலைவர் ராமதாஸ். 

* எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையாத உரை. அமையவில்லை. நதி நீர் பங்கீடு விஷயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கை உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லை.-த.மா.கா. தலைவர் வாசன். 

...இப்படியாக நீள்கின்றன தலைவர்களின் ரியாக்‌ஷன்கள். இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யம். அதாவது அ.தி.மு.க.வுடன் கூட்டணி, பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைப்பார்கள் போல தெரிகிறது! என எதிர்பார்க்கப்படும் தலைவர்களெல்லாம் ஆளுநர் உரையை வரவேற்றும், தடவிக்கொடுத்தும் பேசியுள்ளனர். ராமதாஸ், ஏ.சி.சண்முகம் ஆகியோரின் ரியாக்‌ஷன்கள்தான் இப்படி யோசிக்க வைக்கின்றன. ஆயிரம் இருந்தாலும், அரசியலும் இருக்கணும்யா!