Tamilisai Soundararajan should be suppressed - Congress EVKS Ilangovan

தூத்துக்குடி

“பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகிறவர்களை அவதூறாக பேசுகிறார். அவர் காங்கிரசு கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்தி அடக்கி வாசிக்க வேண்டு,ம்” என்று காங்கிரசு முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தூத்துக்குடியில், காங்கிரசு கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று செய்தியாளர்களிக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அதில், “தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு துரதிர்ஷ்டவசமான ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள் இலஞ்சம், ஊழல் மூலம் முறைகேடாக சம்பாதிப்பதையே பிரதானமாக கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் பிரதமர் மோடியின் காலில் விழுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ளனர். சில அமைச்சர்களுக்கு நாட்டின் பிரதமர் யார்? என்பது கூட தெரியவில்லை.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரையிலும், எந்த அமைச்சருமே தனியாக கருத்துகளை வெளியிடுவதற்கு தடை விதித்து இருந்தார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே தமிழக அரசு செயல்பாடு இழந்து விட்டது.

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். நான் பிரதமரை சந்திக்கும்போது தமிழக அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் பேசுவேன்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகிறவர்களை அவதூறாக பேசுகிறார். அவர் காங்கிரசு கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்தி அடக்கி வாசிக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரதமர் ஆனார். ஆனால், அவர் பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு, ரேசன் பொருட்கள் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளால் மக்களை பாதிப்படைய செய்துள்ளார். இனி நடைபெறும் தேர்தலில் மோடி படுதோல்வியையே சந்திப்பார்.

நடிகர்கள் கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் மக்கள் மனதில் நல்ல இடம் உள்ளது. கமல்ஹாசன் தேச நலனில் அக்கறை உள்ளவர். அவர் இலஞ்சம், ஊழலுக்கு எதிரான கருத்துடன் “இந்தியன்” திரைப்படத்தில் நடித்து தனது எண்ணங்களை பிரதிபலித்தார். அவர் கட்சி ஆரம்பித்து சிறிய வட்டத்திற்குள் செயல்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

டெங்கு கொசுவை ஒழிக்க புதுடெல்லியில் இருந்து மருத்துவர்கள் வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். டெங்கு கொசுவை ஒழிக்க முதலில் துப்புரவு பணியாளர்களை போதுமான அளவு நியமித்து, சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தினகரன் அணியினர் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள் என்று அமைச்சர்களும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விரைவில் மாமியார் வீட்டுக்குச் செல்வார்கள் என்று தினகரன் அணியினரும் கூறி வருகின்றனர். ஆனால் இரு அணியினருமே ஒன்றாக விரைவில் மாமியார் வீட்டுக்குச் செல்வது உறுதி.

வெளிநாட்டில் இருந்து ஆற்று மணலை தூத்துக்குடிக்கு கப்பலில் இறக்குமதி செய்துள்ளனர். இதனை மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்கினால், இங்குள்ளவர்களுக்கு லாபம் கிடைக்காது என்பதால் அதனை நிறுத்த பேரம் பேசி வருகின்றனர். ஆற்று மணலை குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

‘மெர்சல்’ திரைப்படத்தில் சரக்கு சேவை வரி, டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்து விமர்சித்ததால் அந்த படத்துக்கு தடை விதிக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு தமிழக காங்கிரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அகில இந்திய காங்கிரசு துணை தலைவர் ராகுல்காந்தி ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தமிழகத்தில் காங்கிரசு கட்சி செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது” என்று அவர் கூறினார்.