முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் எங்கே இருக்கிறார் என 24 மணி நேரம் தெரியாத நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பிறகு அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு ப. சிதம்பரம் வீட்டில் டிராமாக்கள் அரங்கேறின. 
இந்நிலையில் ப. சிதம்பரம் கைதுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார். “தமிழக அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே தமிழகத்துக்கு தலைக்குனிவு. ப. சிதம்பரம் சட்டம் படித்தவர். வழக்கறிஞராக இருக்கிறார். ஒரு சம்மன் வருகிறது அதை எப்படி அணுக வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவர் எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. 
அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்த பிறகாவது ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம். கதவைகூட திறக்கவில்லை. வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டால் என்ன அர்த்தம்?அவரை கைது செய்யும்போது நடந்த விஷயங்கள் எல்லாமே ப.சிதம்பரமே தேடிக்கொண்டதுதான்.” என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.