tamilisai seek tamilnadu support to bring petrol diesel under gst
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையை கைவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டது.
கடந்த சில தினங்களாக, தினமும் அதிகமாகிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55 காசுகளுக்கு விற்கப்பட்டது. சென்னையில் இதுவே அதிகபட்ச பெட்ரோல் விலையாகும் தொடர்ந்து 2014ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71.55 காசாக குறைந்தது. தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்ட பெட்ரோல் விலை 2015ம் ஆண்டு செப்டம்பரில் ரூ 61. 46 காசாகவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.63.02 காசாகவும் விற்கப்பட்டது.
அதன்பின், ஏற்றப்பாதைக்கு மாறிய பெட்ரோலின் விலை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 71.78 காசாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 79.47 காசாக இருந்தது. அது இன்று காலை 32 காசு அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 79.79 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை 28 காசு உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 71.87 காசுக்கு விற்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வதால், அதன் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவந்தால், விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துவருகிறது.

ஆனால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மாநில அரசின் வரிவருவாய் குறைந்துவிடும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை கண்டிப்பாக குறையும். ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால், மாநில அரசின் வரி வருவாய் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது என தெரிவித்தார்.
