பாஜகவோடு கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என்று கோபம் காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ‘ நேரம் வரும்போது அதை நிரூபிப்பேன்’ என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை பதில் கூறியிருக்கிறார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவோடும் திமுக பேசிக்கொண்டிருக்கிறது. 5 அமைச்சர் பதவி கேட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசையும், “பாஜகவோடு கூட்டணி குறித்து மோடியோடு பேச திமுக முயற்சித்துவருகிறது. காங்கிரஸ், சந்திரசேகர ராவ், பாஜக என மூன்று தரப்பிலும் திமுக பேசிக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.


தமிழிசையின் கருத்து வெளியான அடுத்த உடனே திமுக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “பாஜகவோடு கூட்டணி பேசியதை தமிழிசையும் மோடியும் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறே. நிரூபிக்காவிட்டால், மோடியும் தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா” என்று ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்.


ஸ்டாலினின் இந்த சவாலுக்கும் தமிழிசை பதில் கூறியிருக்கிறார். “எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இதைத் தெரிவித்தேன். அரசியலில் எதையும் நிரூபிக்க வேண்டும் என்று எந்த காலகட்டமும் இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் திமுக பாஜகவோடு பேசியதை நிரூபிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழிசை - ஸ்டாலினின் இந்த சவாலால் தமிழக அரசியல் களம் சூடாகியிருக்கிறது.