திராவிட கட்சிகள் தமிழக விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, அரசியலில் இன்னும் கத்துக்குட்டிதான் என்றும் அவர்  எல்கேஜி தான் படித்துக் கொண்டிருக்கிறார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துரை முருகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியதற்கு பதிலளித்தார்.

அப்போது திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் 36 ஆணைகள் கட்டப்பட்டதாக கூறி அந்த அணைகளின் பெயர்களை பட்டியலிட்டார்.

மேலும் சிறுசிறு கால்வாய்கள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய  வாய்க்கால்கள் அமைக்கப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.

கருணாநிதி ஆட்சிக்காலத்தின் போது தான் விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

முதன் முதலாக காவிரி ஆற்றில் தூர் வாரியது திமுக ஆட்சியில்தான் என்றும் துரை முருகன் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் செய்துள்ள திமுக குறித்து எதுவும் தெரியாமல் தமிழிசை பேசுகிறார். பாவம் அவரை விட்டுவிடுங்கள் என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.