* நாற்பது தொகுதிகளையும் அலசி ஆராய்ந்து, ஸ்பெஷல் டீம் போட்டு சர்வே நடத்தி, தங்களுக்கு தோதான தொகுதி எவை? யாரை நிறுத்தினால் ஜெயிப்போம்! என்பதையெல்லாம் அதிரடியாய் முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின்: செய்தி. (றெக்கைய கட்டிக்கிட்டேன், பறவையாட்டமா கீச் கீச்சுன்னு கத்தவும் செய்யுறேன், மலை மேல இருந்து குதிச்சும் பார்க்கிறேன் ஆனா பறக்க முடியாம, மறுபடி மறுபடி பொதக்கடீர்னு விழுந்து கால் ஒடையுது! ஏன்? எப்படித்தான் பறக்குறது # மொமெண்ட்)

* தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி  தலைவரான செல்வக்குமார் ‘குஜராத்தின் காமராஜர்! டெல்லியின் எம்.ஜி.ஆர்!’ என்று மோடியை புகழ்ந்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்: செய்தி. (அக்கா தமிழிசை நாளைக்கே ஃபிளைட்ட பிடிக்கிறாங்க, அந்த சகோவை சந்திக்கிறாங்க, பின்னே ‘சோஃபியா பொறந்த இதே மண்ணுல இப்படியொரு சோன்பப்படி சகோதரனா?’ன்னு பேட்டி தட்டி பாராட்டுறாங்க. )

* நமக்கு நாமே பயணம் ஆரம்பித்தபோது ‘கிராமத்து ஏழை வீட்டில் தங்குவேன்.’ அப்படின்னு சொன்ன ஸ்டாலின், தங்குனது என்னவோ ஸ்டார் ஹோட்டல்களில்தான்: நாஞ்சில் அன்பழகன். (அண்ணன் யாருப்பா, சொந்த கட்சி தலைவி ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடி படுத்துட்டு இருக்குறப்ப, ஒன்றரை கோடி ரூபாய்க்கு கேண்டீனுக்குள்லே பிரிச்சு மேய்ஞ்ச ஆளுங்க இருக்கிற அதே கட்சிக்காரன்தானே!)

* காங்கிரஸை குறை சொல்வதை தவிர வேறெந்த திட்டத்தையும் பி.ஜே.பி. செயல்படுத்தவில்லை: நாராயணசாமி. (விடுங்க தல! அவிய்ங்க எப்பவுமே அப்படித்தான். ஆனா நாம அரசாண்டப்ப பதினஞ்சே நாட்கள்ள தேசத்தை மாத்தி எழுதிட்டோம்ல!)

* மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசின் வீண் பிடிவாத போக்கை மத்திய அரசு முறியடிக்காமல்  வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை : ஜி.கே.வாசன். (அது கெடக்கட்டும்ணே. ‘ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நமது கட்சியை கண்ணுக்கு புலப்படாத பொருள்’ அப்படின்னு கிண்டலடிச்சிருப்பதற்கு பதிலடி தராமல் தலைவர் வாசன் வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை.’ன்னு த.மா.கா. தொண்டன் கத்துறது காதுல விழுதா?)