யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு தமிழிசை எலிசபெத் ராணியா என்றும், கேள்வி கேட்பதால், ஒருவர் மீது கேஸ் போடுவது, அடிப்பது என்பது எந்த காலத்து ஜனநாயகம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர், அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியும் மாநிலத்தில் இருக்கும் பழனிசாமி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்றும், வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் அரசை தமிழக மக்கள் பார்த்து இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கந்தன்சாவடியில், திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன் பின்னர் துரைமுருகன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பெட்ரோல் விலையேற்றம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், என்னவென்றே தெரியவில்லை... உலகத்தின் எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும், எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு? இது ஜனநாயகநாடு... கேள்விகள் கேட்பார்கள்.

 திராவிட இயக்கத்துக்கு மட்டுமே அந்த பெருமை உண்டு. மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, சீட்டுகளில் கேள்விகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு பதலளித்துக் கொண்டே இருப்போம். 

 எல்லாம் பொதுவுடைமைன்னு சொல்றியே, உன் மனைவி நாகம்மை பொதுவுடைமையா என்று, தந்தை பெரியாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பெரியார், முடிந்தால் கூட்டிச் செல் என்றார். கேள்வி கேட்பதனால், அவர் மீது கேஸ் போடுவது, அடிப்பது என்பது எந்த காலத்து ஜனநாயகம் என்று கேள்வி எழுப்பினார். பாலிடிக்சில் தமிழிசை இன்னும் கொஞ்சம் ட்ரைன் ஆகணும் என்றும், அவர் சிறு வயது முதல் தனக்கு தெரியும் என்றும் துரைமுருகன் கூறினார்.