திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற மத நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறித்து பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி தசரா விழாவில் பங்கேற்று ஜெய்ராம் என எப்படி முழக்கமிடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்புயுள்ளார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மற்ற மதத்தினர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடவுள் நம்பிக்கையற்றவர் எனக் கூறிக்கொள்ளும் அவரே, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, மத நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டதில் என்ன தவறு? இது எப்படி மத உணர்வை தூண்டுவதாக அமையும்?
பிரதமராக இருந்தபோதும், இப்போதும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் தசரா விழாவில் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார். இவற்றையெல்லாம் விமர்ச்சிக்காத கருணாநிதி மோடியை மட்டும் விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது.
கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற மத பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்பவர் கருணாநிதி. ஆனால், முதலமைச்சராக இருந்தபோதுகூட தீபாவளிக்கு அவர் வாழ்த்து சொன்னதில்லை. கருணாநிதி மதச்சார்பற்ற தலைவரா? அல்லது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவரா? என்ற கேள்வியை இப்போது சாதாரண மக்களும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
பிரதமர் மோடி மீது எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாதவர்கள், இதுபோல மதவாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். வழக்கம்போல இதை மக்கள் புறம் தள்ளுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
